எமது பாடசாலை - ப.விஜயகாந்தன்


எமது பாடசாலையின் பெயர் பெற்றோசோ தமிழ் வித்தியாலயம் ஆகும். பாடசாலை மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் வலயத்தில் அமைந்துள்ளது. பொகவந்தலாவை நகரத்தில் இருந்து பலாங்கொடை பாதையில் சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்தில் பெற்றோசோ தோட்டத்தின் அருகாமையில் எமது பாடசாலை அமைந்துள்ளது.

கலவன் பாடசாலையாக காணப்படும் எமது பாடசாலையில் ஆண்களும், பெண்களுமாக சுமார் முன்னூற்று ஐம்பது மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அதிபர் உட்பட இருபது ஆசிரியர்கள் தற்போது (2011ல்) கடமைப்புரிகின்றனர். தரம் ஒன்று முதல் தரம் பதினொன்று வரையிலான வகுப்புக்கள் எமது பாடசாலையில் காணப்படுகின்றன.

எமது பாடசாலையின் வலாற்றை நோக்குவோமானல், சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள் இப்பிரதேசத்தில் பாடசாலை இயங்குவதாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கான ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இப்பாடசாலையில் தரம் ஐந்துவரையான வகுப்புக்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. படிப்படியாக க.பொ.த சாதாரண தரம் வரை வகுப்புக்கள் தற்போது நடைபெறுகின்றது. 

இப்பாடசாலையின் முதலாவது அதிபராக திரு சிவகுரு அவர்கள் கடமைப்புரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திரு கு.நு.அந்தனி, திரு ஜெயசிங், திரு ளு.பாலசுப்ரமணியம், திரு ராஜகோபால், திருமதி மு. ராஜேஸ்வரி, திரு ஏ.ஜெயராம், திருமதி அடைக்கலமேரி ஆகியோர் இப்பாடசாலையின் அதிபர்களாக கடமையாற்றியுள்ளனர். 2004ம் ஆண்டிலிருந்து இப்பாடசாலையின் அதிபராக திரு ளு.P.ளு. விக்டர் அவர்கள் அதிபராக கடமைப்புரிகின்றார். ஆரம்பத்தில் மூன்று ஆசிரியர் கல்வி கற்றுக் கொடுத்துள்ளனர் தற்போது பதினெட்டு ஆசிரியர்கள் எமது பாடசாலையில் கடமைபுரிகின்றனர்.

எமது பாடசாலையின் வளர்ச்சியை பார்ப்போமானால் ஆரம்பக்காலத்தை விட தற்போது நிறைய வளர்ச்சிகள் காணப்படுகின்றன. ஆரம்பக்காலத்தில் நாற்பது மாணவர்கள் கல்வி கற்றதாகக் கூறப்படுகின்றது. தற்போது சுமார் முன்னூற்றைம்பது மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஒரு கட்டிடத்தில் இயங்கிய இப்பாடசாலைக்கு சீடா செயற்றிட்டத்தினால் 1992ம் ஆண்டு மேலும் ஒரு கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு இப்பாடசாலைக்கு ஒரு கனிணி அறை அமைக்கப்பட்டுள்ளது. 

எமது பாடசாலையின் கல்வி பெறுபேறுகளை நோக்குவோமானால் 2009ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளை நான்கு மாணவர்கள் பெற்றுள்ளனர். 2010ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் எழுபத்தைந்திற்கும் கூடிய புள்ளிகளை பதிநான்கு மாணவர்களும் நூற்றிற்கு கூடிய புள்ளிகளை ஆறு மாணவர்களும் பெற்றுள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 2007ம் ஆண்டு ஆறு மாணவர்களும், 2008 ஒன்பது மாணவர்களும் 2009ம் ஆண்டு ஒன்பது மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். அன்னளவாக இப்பாடசாலையில் இருந்து இருபத்து நான்கு மாணவர்கள் வெளிபாடசாலைகளுக்கு க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்று சென்றுள்ளனர்.

எமது பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளை நோக்கும் போது ஹட்டன் வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கணித – விஞ்ஞான போட்டியில் எமது பாடசாலைக்கு இரண்டு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது.  வலயமட்டத்தில் 2010ம் ஆண்டு நடைபெற்ற சமூகக் கல்விப் போட்டியில் ஒருமாணவன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளான். அதேபோல 2010ம் ஆண்டு ஹட்டன் பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் குழுவினால் நடத்தப்பட்ட வீதியோட்டப் போட்டியில் எமது பாடசாலை மாணவி பத்தாம் இடத்தை பெற்றுள்ளாள். தமிழ் மொழித்தினப் போட்டிகளிலும் எமது பாடசாலை மாணவர் கள் வெற்றிகளை பெற்றுள்ளனர். அத்தோடு பாடசாலையின் இலக்கிய மன்றம், இல்ல விளையாட்டுப் போட்டிகள் என்பன சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்தகைய சிறப்புக்கள் எமது பாடசாலையில் காணப்பட்டாலும் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. அப்பிரச்சினைகளை பார்க்கும் போது கட்டிட வசதியின்மை, மைதானமின்மை, இணைய வசதியின்மை, விஞ்ஞான ஆய்வுக்கூடம் இன்மை, நூலக பயன்பாட்டு வசதியின்மை, தளபாடவசதியின்மை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தால் எதிர்காலத்தில் மேலும் எமது பாடசாலை சிறப்புடன் வளரும்.