இறைவனின் படைப்பான இவ் அற்புதமான உலகில் வானம், பூமி, மரம், செடி, கொடி, மிருகங்கள் மனிதர்கள் என்றிருக்க அனைவரின் வாழ்விலும் தாய் என்ற ஒரு அற்புத படைப்பை படைத்துவிட்டான் இறைவன். இவ்வாறிருக்க தாயை புகழ வார்த்தைகளே இல்லை. தாயின் கடனை திருப்பிக் கொடுக்கவும் முடியாது.
'எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே...' என்பது சினிமா பாடலாகும். அந்தவகையில் தாயானவள் ஒரு பிள்ளையின் வாழ்வை செம்மைச்செய்வதில் தனது பங்களிப்பை உச்ச அளவில் செய்கின்றாள். எந்த குழந்தையும் முதலில் காணும் உருவமும் உறவும் அன்னையே ஆகும். தந்தையை கூட தாய் சொல்லித்தான் அறிகிறது.
குழந்தைக்கு பண்பாடும் பழக்க வழக்கமும் கற்று தருவது தாயால் மாத்திரமே முடியும். வாழ்க்கையை செம்மைச்செய்வதும் சீர் செய்வதும் புனிதமான தாயன்பே ஆகும். இதனை கற்றுத்தருவது தாயே. குழந்தை வளர்ந்து வரும்போது அதன் ஒவ்வொரு பருவத்திலும் தேவையான ஒவ்வொன்றையும் கற்றுத் தருவதும் தேவைகளை பூர்த்தி செய்வதும் தாயினால் மட்டுமே முடிகிறது.
சமுதாயத்தாலும் சூழ்நிலையாலும் பிள்ளைகள் தீய வழிகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றமையை நாம் அனைவரும் காணக்கூடியதாக உள்ளது. அத்தகையவர்களை தன் அன்பின் அரவணைப்பின் மூலமே நல்வழிப்படுத்துவது தாயாவாள்.
'மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும் முன்னேறியதாக சரித்திரமில்லை' என்பது முதுமொழியாகும். அந்தவகையில் ஒரு பயிரை நாட்டினால் மட்டும் போதாது. அது செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலையும் தரவேண்டும்ட. அதற்கு நீர் அவசியம். ஆகவே மழைக்காலங்களில் நாற்று நடுவது வழக்கம். அதைப்போல ஒரு குழந்தை பிறந்தது முதல் நல்லப்பிரஜையாக வளர்வதற்கு தாயின் நல் வழிகாட்டல்களும் அன்பும் கட்டாயம் அவசியமாகிறது. அப்போது தான் அக்குழந்தை அன்பு, பாசம், ஒழுக்கம், மரியாதை போன்ற நல்ல விடயங்களை கற்று பின்பற்றும்.
தன்னை வளர்க்கும் தாயை துன்பமின்றி இறுதி மூச்சுவரை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணமே அக்குழந்தைக்கும் தோன்றும். பணத்தாலும் கண்டிப்பாலும் சாதிக்க முடியாத ஒன்றை தாயின் அன்பினால் சாதிக்க முடியும். அது தான் தாயின் வளர்ப்பு.
ஒரு குழந்தை வாழ்வில் வெற்றி பெறவும் சமுதாயத்தோடு உடன்பட்டு வாழவும் உலகைப்பற்றி அறிந்துக்கொள்ளவும் தீய எண்ணங்களை விட்டகழவும் ஊர் சிறக்கவும் சிறந்த குடிமகான வாழவும் அன்பான தாயின் பங்களிப்பு மிக மிக அவசியமானது. எனவே எமது அன்பான தாய்மையை போற்றுவோம்.