கூத்து மீளுருவாக்கம் – கற்றல் கற்பித்தலின் அவசியம் - கலாநிதி சி.ஜெயசங்கர்


ஈழத்து தமிழர்களின் அரங்க அறிவியல் வரலாற்றில் 2002 களில் முன்மொழியப்பட்ட கூத்து மீளுருவாக்கம் எனும் கோட்பாடு உலக அரங்க அறிவியல் பரப்பிற்கு ஈழத்து தமிழ் அரங்கு வழங்கிய புதியதோர் அரங்க அறிவியலாக அமைந்துள்ளது.

அதாவது ஏற்கெனவே ஈழத்துத் தமிழர்களிடமிருந்து கல்வியியல் அரங்கு, தளை நீக்கத்திற்கான அரங்கு எனும் புதிய போக்குகள் உலக அரங்கப் போக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள பின்னணியில் இதன் தொடர்ச்சியாக கூத்து மீளுருவாக்கம் எனும் புதிய கோட்பாடு முன்மொழியப்பட்டு அது சர்வதேச அரங்கத்துறை சார் புலமையாளர்களின் கவனத்தைப் பெற்ற புதிய கோட்பாடாக அமைந்து வருகின்றது.

ஆபிரிக்க அரங்கின் காலனீய நீக்க அரங்கச் செயற்பாடுகளைப் போல் தென்னாசியாவின் காலனீய நீக்க அரங்கச் செயற்பாடாக கூத்து மீளுருவாக்கம் அமைந்துள்ளது. இது இன்றைய நவ காலனித்துவச் சூழலில் மனிதர்களின் சுயசார்பான வாழ்வியலைத் தக்க வைப்பதற்கான விடுதலைக் கொள்கையினை வலியுறுத்தி அதனைச் சாத்தியமாக்கும் செயல்மையச் சிந்தனைப்பள்ளியாக அமைந்துள்ளது.

எனவே ஈழத்து அரங்க அறிவியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமான மிகப் பிந்திய புதிய அரங்க அறிவியலாகவுள்ள அக்கொள்கையினைப்பற்றி அரங்கத் துறையில் ஈடுபடுபவர்கள் அறிய வேண்டியதும் கற்க வேண்டியதும் கற்பிக்கப்பட வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.
விடுதலைக்கான அரங்கியலில் அக்கறை கொண்டவர்கள் யாவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து கூத்து மீளுருவாக்கம் என்றால் என்ன? அது முன்மொழியும் சிந்தனைகள் என்ன? அதன் செயல் முறைக் கற்றல் கற்பித்தல் எப்படியானது? என்பதை நோக்கி புதிய தலைமுறைகளை வழிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இப்படிச் செய்வதுதான் நாரீகமான நீதியான நேர்மையான பெருந்தன்மையான ஆசிரியத்துவமாகும் அதைவிடுத்து கூத்து மீளுருவாக்கத்தைத் திரிபுபடுத்தும் விதத்தில் தமது புலமைத்துவத்தைப் பயன்படுத்த எத்தனிப்பதும், கூத்து மீளுருவாக்கம் பற்றி உயர்கல்வித் துறையில் குறிப்பாக பல்கலைக் கழக மட்டத்தில் நாடகத்துறை சார் மாணவர்கள் அறிய விடாது இருட்டடிப்புச் செய்யும் விதமாக முட்டுக் கட்டைகளைப் போடுவதும் கண்ணியமான புலமைத்துவத்திற்கு முறையானதல்ல. இப்படிச் செய்வது மார்க்ஸ்ஸீயச் சிந்தனையாளர்களுக்கு எதிராக பாஸிஸ்டுக்கள் கையாண்ட செயலுக்குச் சற்றும் வித்தியாசமற்ற செயல்களாகவே அமைந்திருக்கும்.

சமதாயப் படிமுறைக் கோட்பாடுக;டாக தமிழ் இலக்கிய வரலாற்றினைப் புதிய கோணத்தில் ஆராய்ந்து தமிழர்களின் இலக்கிய வரலாற்று எழுத்தியலைப் புரட்டிப் போட்ட பேராசியர் க.கைலாசபதியின் வீரயுகப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சியையும், பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பண்டைத் தமிழர்களின் நாடக வரலாறு பற்றிய ஆராய்ச்சியையும் மிகவும் முக்கியப்படுத்தும் நாம் வரலாற்றில் தனிநாயகம் அடிகளின் ஆராய்ச்சிகளையும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் ஆராய்ச்சிகளையும் இருட்டடிப்புச் செய்தமை போன்று கூத்து மீளுருவாக்கம் எனும் ஆராய்ச்சி முன்வைக்கும் சிந்தனைகளை இருட்டடிப்புச் செய்ய முனையும் வரலாறு மீண்டும் மீண்டும் தொடர்வது ஆக்கபூர்வமான முற்போக்கான எதிர்காலத்திற்குச் சாவுமணி அடிப்பதாகவே தெரிகின்றது.

வரலாற்றில் சாக்கிரட்டீசுகளும், கலிலியோக்களும் தான் வென்றார்கள் ஆனால் அவர்கள் வாழ்ந்த காலங்களில் சாக்கிரட்டிசுக்களையும், கலிலியோக்களையும் இருட்டடிப்புச் செய்தவர்கள் வென்றதாக சரித்திரம் இல்லை.

அதிகாரம் இருக்கும் வரை பொய்களை உண்மைகளாக்கிய ஜே கோயபல்ஸ்சுகளும் இறுதியில் யார் என அடையாளங் காணப்பட்டார்கள். எனவே பல்கலைக்கழக அரங்கத்துறைசார் கற்றல் கற்பித்தலில் பலவற்றையும் மாணவர்கள் கற்றுத் தேறுவதற்கான ஜனநாயகச் சூழல் மிகவும் அவசியமாகும். அப்படியானால்தான் ஈழத்து அரங்கச் சூழலில் ஆயிரம் பூக்கள் மலர முடியும். ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று சொன்னவர் தலைவர் மாவோ சேதுங்.