துக்கத்தின் துயரம் - சிறுகதை

வீட்டு வறுமையை நன்கு அறிந்தவள் திவ்யா. “தம்பி தம்பி” என்று என்மீது உயிரையே விட்டுவிடுவாள். படிப்பை நிறுத்தி விட்டு வெளியூருக்குச் செல்ல அப்பாவிடம் அனுமதி கேட்டாள். அதற்கு அப்பா “வேணா வேணா” என்று கூறினார். ஆனாலும் திவ்யா யாருக்கும் தெரியாமல் வெளியூருக்குச் சென்று விட்டாள்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் திவ்யா வீதி விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. அதை கேள்விப்பட்ட பார்வதி “ஐயோ எம் புள்ள போயிருச்சா?” என்று கத்தினாள். 

மரணத்தை அறிந்த அப்பா அக்காவின் பூதவுடலோடு வீட்டுக்கு வந்தார். அடுத்தநாள் “பெட்டி எடுப்பதற்காக போறேன்” என்றார்.

“நானும் வாரேன் அப்பா” என்றேன். 

லொறியில் போகும் போது “அப்பா எனக்கு பசிக்குது” என்றேன். உடனே கடையில் பனிஸ் வாங்கினார். சாப்பிட்டுக் கொண்டே போனோம். வரும் போது லொறி டயரில் காத்து போய் விட்டது. 

அங்கிருந்து வீடு வந்து சேரும் போது மாலை நான்கு மணி. அடுத்த வீட்டு மூக்காயி அழுதுக் கொண்டு இருந்தாள். “ஏ இராமையா, வேலுசாமி, சுப்ரமணி, ராக்கப்பா எல்லாம் வாங்கடா பெட்டிய எறக்குவோம்” என்று நல்லத்தம்பி அண்ணன் கூப்பிட்டார். பாட்டி பொக்கை வாயை காட்டிக் கொண்டு “ஐயோ ஏஞ்சாமி சொல்லாம போனீயே... இப்ப சொடுக்குனு போயிட்டியே” என்று ஒப்பாரி வைத்தார்.

அப்பாவும் அம்மாவும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள். அப்போது அப்பா தேசிக்காயை வாயால் கடித்து நான்கு புறமும் வீசினார். அக்காவின் பூதவுடலை லொறியிலிருந்து இறக்கியவுடன் ஈ மொய்ப்பது போல எல்லோரும் சுற்றி நின்றனர். சம்பிரதாயப்படி தேங்காய் உடைத்தல், மணம் வராமல் நீரில் அருவதம்பச்சை போடுதல், விளக்கேற்றுதல், நிறைநாளி வைத்தல், பத்தி ஏற்றுதல், எள்ளு தண்ணி இரைத்தல் என்பனவற்றை முறைப்படி செய்து,  திவ்யாவின் பூதவுடலை எல்லோரும் வணங்கினர்.

‘ஓடும்பிள்ளை’ சிவனு உறவினர்களுக்கு செய்திச் சொல்ல அனுப்பப்பட்டான். மறுநாள் நல்லடக்கத்திற்காக நேரம் பார்த்து குறித்தார்கள்.

நல்லடக்கம் செய்யும் முன்னர் சகோதரர் முறைக்காரர்கள் ‘நீர்மாலை’ எடுத்து வந்தார்கள். அவர்களின் கால்களை பிடித்துக் கொண்டு எல்லோரும் கதறி அழுதார்கள். “இருங்க, அழுவாதிங்க சாங்கியம் செய்யனும் சத்தம் போடாதிங்க” என்று இராமையா கூறினார். 

மாமன் - மச்சான் முறைக்காரர்கள் ‘கோடி’ எடுத்து திவ்யாவின் பூதவுடலில் சாற்றினார்கள். சமயக்கிரியைகளும் செய்தார்கள். “திவ்யா கன்னி கழியாத புள்ள, கன்னி கழிக்கப் போறோம். கல்யாணம் முடிக்காதவங்க தூர போங்க” என்று சொல்லிவிட்டு பூதவுடலையும் வாழைக்கன்றையும் இணைத்து வாழைக்கன்றை ஓங்கி வெட்டினார் மேஸ்திரி (வண்ணான்) அண்ணன்.

பின்பு வாக்கரிசி போடுதல், நெய்ப்பந்தம் பிடித்தல், அரக்கு எண்ணை தேய்த்தல் என்பன இடம்பெற்றன. “சீதேவிய வாங்கிக் கிட்டு தூக்குங்கப்பா நேரமாச்சி” என்றார் சுப்பிரமணி.

சங்கு, சேங்கண்டி, தப்பு, பட்டாசு என்பவற்றின் ஒலியோடு சேர்ந்து கதறல் ஒலியும் கேட்டது. பூதவுடலை தூக்கிச் சென்றார்கள். முச்சந்தியில் ‘கொல்லிகுடம்’ உடைத்து நல்லடக்கம் செய்தார்கள். 

திரும்பிப் பார்க்காமல் எல்லோரும் வீட்டுக்கு வந்தார்கள். சாம்புராணி போட்டப்பின்னர், சலுப்புச் சோறும் சாப்பிட்டனர். இரவு நெடுநேரமாக திவ்யாவின் கடந்தகாலம் பற்றி துயரத்தோடு பேசிக்கொண்டிருந்தனர்.
ஆக்கம் 
சுபிதரன்
சால்ஸ்ராஜ்
முரளிதரன்
மனோஜ்
சுகனியா
ஊர்மிளாதேவி