பதேர் பாஞ்சாலி, சில மனப்பதிவுகள் - ப.விஜயகாந்தன்

சினிமா என்பது ஒரு சிறந்த ஊடகம். உயர்ந்தோர் முதல் தாழ்ந்தோர் வரை, பெரியோர் முதல் சிறியோர் வரை ஆழ ஊடுருவி மன அலைகளை தூண்டக்கூடிய ஒரு சக்திமிக்க ஊடகமாகும்.
இன்றைய உலகில் தம் வாழ்வியல் அம்சங்களில் ஒன்றாகிப்போன, பின்னிப்பிணைந்துப்போன சினிமா அதன் அர்த்தப்படுத்தலில் கூட இன்று வியாபார, பொருளீட்டல் உத்தியாகவும், பண்டமாகவும் மாறியுள்ளது. இந்த தளத்திலிருந்து கலையம்சம் நிறைந்த படங்கள் பற்றி பேசுவது அணுவாயுத குழுவிற்கு எதிராக வாற்போர் வீரனொருவன் மாட்டிக்கொண்டதற்கு நிகராகவே படுகின்றது. இருந்தும் கொசுக்களுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடாமல் இன்றைய வியாபார சினிமாவிற்கு எதிராக சிந்திப்பதற்கான துணிச்சலையும் கலைப்படங்கள் தந்துக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

துரதிஷ்டவசமாக ஏறத்தால ஐம்பது வருடங்களுக்கு முன் மனித மனங்களை வருடிச்சென்ற ஒரு கலைப்படைப்பை அன்மைக்காலங்களில் தான் பார்த்து இரசித்து உணர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த பொக்கிஷம் தான் கலைஞர் 'சத்தியஜித்ரே' தந்த 'பதேர் பாஞ்சாலி' ஆகும். 1955 முதல் தொடர்ச்சியாக இவர் படைத்தளித்த தேவி(1960), சாருலதா(1964), ஷாகாபிரஷாகா(1990) போன்ற படங்களின் வரிசையிலே பதேர் பாஞ்சாலியே கவித்துவம் மிகவும் உச்ச நிலையில் விரவிக் காணப்படும் படம் என்பதில் தவறொன்றும் இருக்காது.

சத்தியஜித்ரே

சினிமா படம் என்ற பெயரில் கமராக்கள் எம் முன் போடும் தாண்டவக்கூத்துக்களின் கோரப்பிடியில் இருக்கும் நம் முன்னே சத்தியஜித்ரே ஒரு ஆமை வேகத்தில் கதை நகர்த்தும் அறுவறுப்பான இயக்குனராக படலாம். ஆனால் தன் மெதுவியக்கத்தால் ஆயிரம் அர்த்தங்களை உணர்த்தும் ரேயின் அற்புத செய்திகள் மாற்று சினிமா பிரியர்களை அதிசயிக்க வைக்கின்றன.

ஐந்து தசாப்த காலத்திற்கு முந்திய இந்தியாவின் வெளியுலக நாயகனாக விளங்கிய ரவிந்திரநாத் தாகூரிற்கு பிறகு சத்தியஜித்ரேயே அந்த ஸ்தானத்தைப் பற்றிக்கொண்டவரென்பது உண்மை.

இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முக ஆளுமை கொண்ட ரே ஏறத்தாள முப்பத்தைந்து திரைப்படங்களை உயர்ந்த கலைப்படைப்புடன் தந்த பெருமைக்குரியவராகின்றார். இவரது படங்களில் ஆழ அகலமாகக் காணப்படும் கருப்பொருள் புராதன இந்தியாவே என கூறலாம். இந்தியாவின் மெய்யான விஸ்வரூபத்தை வெளியுலக்கிற்கு கருப்பு - வெள்ளை நிறத்தால் தனது கமராவின் மூலம் பத்திரப்படுத்தியிருப்பது இவரது அற்புதமான சாதனை என கூறலாம்.

ரவிந்திரநாத் தாகூரின் எழுத்துப்பாடல்கள், ஓவியங்கள், அவருடனான நேரடி கலந்துரையாடல்கள், அவற்றோடு இத்தாலிய, நியோரியலிச படங்களின் தாக்கங்கள், இந்திய பண்பாட்டு கலாசார மற்றும் கிராமிய அனுபவங்கள் முதலானவைகளே ரேயின் கலைப்படைப்புக்கான பிரதான பின்னணிகள் எனலாம்.

சோகரசத்தின் மூலமே உண்மையான மனித உணர்வுகளை வெளிக்கொணர முடியும் என நன்கு உணர்ந்திருந்த ரே வாழ்க்கைப் போராட்டங்கள், சலிப்பு தன்மை, அவமதிப்பு, விரக்தி, வெறுப்பு போன்ற பலவிடயங்களை வெளிப்படுத்தி யதார்த்தத்தை மிஞ்சாது வெகு சிறப்பாக மனித மனதை இரசிகர்களுக்கு பறைசாற்ற முயன்று, அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவை அத்தனைக்குமே நிர்மாணிக்கப்படும் திரைக்கதைகளை தனது மனைவி 'பிஜோ'விடமே முதன் முதலில் பரிமாறிக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மையான மனித அன்பு, மேலான குணங்கள் என்பவற்றை சோகத்தின் மூலம் வெளிக்கொணர்வதில் மிகவும் கைதேர்ந்தவர் ரே. உலகில் தலைசிறந்த பத்து இயக்குனர்களில் ஒருவராக ரே பேசப்பட்டதும் இன்று தேய்ப்பிறையாகிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தை படைத்தளித்தப் போது ரேவுக்கு முப்பத்திரண்டு வயதே நிரம்பியிருந்தது.

ரேயின் படங்கள் உலக அளவில் ஆத்மார்த்த தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது, உண்டுபண்ணியிருக்கும் என்பது உண்மையே. படத்தில் உரையாடல் இன்றியும் சினிமா மொழியால் வாசகருடன் பினைப்பை ஏற்படுத்தும் இவரின் ஆளுமைச்சிறப்பை ஜப்பானிய திரைப்படக் கலைஞர் 'அகிரோ குரோசாவா' என்பவரின் 'சத்தியஜித்ரேயின் திரைப்படங்களை பார்க்காமலேயே இருந்திருப்பதென்பது இவ்வுலகில் வாழாமலேயே இருந்திருப்பதாகும்' என்ற கூற்றின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

பதேர் பாஞ்சாலி - கதைச்சுருக்கம்

'பதேர் பாஞ்சாலி' என்பது 'தெருப்பாடல்' என அர்த்தப்படுகின்றது. ஹரிஹரியின் குடும்பம் சோற்றுக்கு வழியில்லாத நிலையினை பதேர் பாஞ்சாலி படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது. ஹரிஹரி, மகன் அப்பு, மகள் துர்க்கா, மனைவி, சகோதரி ஆகியோரே படத்தின் நட்சத்திரங்கள். ஹரிஹரி தன் கிராமத்தின் கோயில் பூசாரி. சாந்தமான முகபாவனையும் குணாம்சமும் கொண்டவர். ஹரிஹரியின் மனைவிக்கும் சகோதரிக்குமுள்ள உறவு எரிச்சலும் கோபமும் சண்டையும் நிறைந்ததாக காணப்படுகின்றது. ஹரிஹரியின் பிள்ளைகளுக்கும் சகோதரிக்கமிடையிலான உறவு நிரந்தரமான அன்பு நிறைந்ததாக காணப்படுகின்றது. மகள் துர்க்கா தன் அத்தைக்காக பழம் ஒன்றை களவாடிவந்து வழங்குகின்றாள். இது அன்பின் மேலீட்டலாக அமைகின்றது. ஹரிஹரி வேலை நிமித்தம் வெளியூர் போகின்றார். இவ்வேளையில் மனைவிக்கு குடும்பம் பெரும் சுமையாகின்றது. கூடவே நோய்வாய்ப்பட்ட துர்க்கா புயலும் மழையும் சூழ்ந்த ஒரு இரவுப் பொழுதில் இறந்துப் போகிறாள். தன் உயிரையே துர்க்கா மீது வைத்திருந்த ஹரிஹரி வெளியூரில் சம்பாதித்த பணத்தில் துர்க்காவிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்புகையில் நடந்து முடிந்த துர்க்காவின் மரணம், அதனால் ஹரிஹரிக்கு ஏற்பட்ட துயரம் எமக்கும் தொண்டையை நெருக்குகிறது. துர்க்காவின் பிரிவால் கிராமத்தை விட்டே நிரந்தரமாக பிரிகிறது ஹரிஹரியின் குடும்பம்.

இசை மேதை இரவிசங்கர் இப்படத்திற்கு இசையமைத்து சோகத்தை ரேயுடன் இணைந்து அள்ளி பொழிந்துள்ளார்.

கலை நுட்பமும் தொழில் நுட்பமும்

ஹரிஹரியின் மனைவிக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவைக்காட்டும் காட்சியின் போது சகோதரியின் அளவு கடந்த கோபமும் மனைவியின் எரிச்லும் இயல்பான எளிய ஏழைக்குடும்பங்களில் இடம்பெறும் உண்மைகளுக்கும் இந்திய சமூக அமைப்பில், பெண்களுக்கு புகுந்த வீட்டில் காணப்படும் நிலைக்கும் எடுத்துக்காட்டாக அமைகிறது.

ஹரிஹரியின் பிள்ளைகளுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவானது, மிக அற்புதமான – முதியோர்களுக்கும் சிறுவர்களுக்குமிடையிலான அந்யோன்யத்தை காட்டி நிற்கின்றது. தன் அத்தைக்காக பழத்தை களவாடுவதும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளுக்கு அத்தை காட்டும் ஆதரவும், அத்தையுடன் பிள்ளைகள் சுற்றித்திரிந்து மகிழ்வதும், கடைசியாய் மரத்தோப்பின் மத்தியில் பிள்ளைகள் தேடிச்சென்று நிலத்தில் கிடந்த தன் அத்தையை தூக்கி அமரச்செய்கையில் உயிர் பிரிந்து உடல் வீழும் காட்சியமைப்பானது உம் கண்களிலும் ஈரத்தைப் பரவச்செய்து துன்பத்தில் ஆழ்த்துகிறது. அத்தோடு இதன் பின்னணியில் வயது முதிர்ந்தோருக்கு சமூகத்தில் ஏற்படும் துயர நிலையும் புலப்படுகின்றது.

ஹரிஹரியின் பிள்ளைகள் இருவரின் துலங்கள்களும் பல சிந்தனைகளை கிளரிவிடுகின்றன. ஏழை எளிய குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு பிற மனிதர்களோடு பழகுவதில் ஏற்படும் தாழ்வுச் சிக்கல் இவ்விரு பிள்ளைகளால் புலப்படுத்தப்படுகின்றது. அத்தோடு தம் விருப்பத்திற்கேற்ப ஏதேனும் திண்பண்டத்தையும் கூட பெற்றுக்கொள்ள முடியாது வக்கற்ற வறுமை நிலையும் இயல்பான சிறுவர்களின் மனவுணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றமையும் ஆதாரப்படுகின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் துர்க்கா ஒரு காற்கொழுசு களவுச் செயலில் மாட்டிக்கொள்ள, அப்புவிற்கு அது தெரிந்தே இருக்கின்றது. துர்க்காவின் மரணத்தின் பின்பும் துர்க்காவை காப்பாற்றி கொண்டே இருக்கின்றான். இது இயல்பான சகோதர உறவையும் பாசத்தையும் காட்டுகின்றது.

ஹரி, அவர்தம் மனைவி ஆகிய பாத்திரப்படைப்பானது முற்றுமுழுதாக வறுமையை சுமந்து செல்வதாகவே அமைகிறது. அவர்களிடம் பாச மேலீட்டலை காணமுடிகிறது. அவர்கள் இருவரும் இந்திய குடும்பச்சூழலுக்கு புடை சூழ்கின்றனர்.

ஒரு பலசரக்கு வியாபாரியிடம் கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் அப்புவும் அமர்ந்திருக்கின்றான். ஆசிரியரின் கண்டிப்பும், கடும் பார்வையும் கட்டுப்பாடும் தண்டிப்பும் தாழ்த்தப்பட்ட இனங்கள் கல்வி வாய்ப்பினை பெறுவதிலுள்ள கெடுபிடிகளை காட்டுகின்றன. அக்கிராமத்தில் பெண்பிள்ளைகள் கல்வி கற்க செல்லாதிருப்பதானது பெண்கள் கற்கக்கூடாது என்ற, அதுவரையும் காணப்பட்ட அடக்குமுறையை எடுத்துரைக்கின்றது.

அடர்ந்த செடிகள் நிறைந்த ஒரு பிரதேசத்தின் வழியாக அப்புவும் துர்க்காவும் விளையாடிக்கொண்டே செல்கின்றனர். அதன்போது புதிதாக ஒரு ஓசையை அவர்கள் அவதானிக்கின்றார்கள். எழுந்து ஓடி பார்க்கும் போது தொலைவிலிருந்து ஒரு இரயில்வண்டி வருகின்றது. அந்த இரயில்வண்டி காட்சியால் இரவிசங்கரின் இசைக்கொண்டு பல உண்மைகளை புலப்படுத்துகின்றார் ரே. நகரத்தை பாராத, வெளியுலகை அறியாத, புதுமைகளை தேடத்துடிக்கும் அச்சிறுவர்களின் மூலம் கிராமத்திற்குள்ளேயே ஒதுக்கப்பட்ட ஒரு இனத்தின் அவல நிலை தெரிகிறது. புதுமைகளை காணும் அந்த இளம் உள்ளங்களும் படபடக்கின்றன. படத்தின் முழுமையிலும் இழையோடியுள்ள இரவிசங்கரின் இசை படத்திற்கு பக்கபலமாகவே அமைகின்றது.

கலைநுட்பங்களை திறம்பட கையாண்ட ரே தொழில்நுட்பத்தினையும் வரையறுத்து அளவவாகவும் அம்சமாகவும் பயன்படுத்தியுள்ளார்.

கமரா அசைவுகள், முன்னின்று படங்களை இயக்கும் நிலையை தவிர்த்து இப்படத்தை ரே முன்னின்று இயக்கியுள்ளார். படத்தொகுப்பு (நுனவைiபெ) இடைநிறுத்தல்கள் (ஊரவவiபெ) இன்றி அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் தொடர்ச்சியானதாகவும் நுணுக்கமானதாகவும்; அமைக்கப்பட்டுள்ளது. நடிகர்களுக்கு பதிலாக கணிணி முதலான தொழில்நுட்ப சாதனங்கள் நடிக்கவில்லை. மிதமிஞ்சிய உடையலங்காரங்களோ, ஒப்பனைகளோ இடம்பெறவில்லை. ஒட்டுமொத்தமான படமும் ஒரு மெதுவியக்கத்தை கொண்டிருப்பது படத்தின் முழுமையான வெற்றிக்கு காரணமென பலரும் புகழ்கின்றனர்.

சென்னை நகரின் தலைமையின் கீழ் உலகின் பிரபல்யமான நகரங்களில் இடம்பெறும் இந்திய படப்பிடிப்புக்களின் மத்தியில் வங்க தேசத்தில் ஒரு கிராமத்தில் இடம்பெற்ற ரேயின் படப்பிடிப்பு மாற்று சினிமாவின் அடிநாதம் என்பதில் ஐயமில்லை. ஒருமித்த கண்கொண்டு பார்க்கையில் நல்ல சினிமாவுக்கு பதேர் பாஞ்சாலி ஓர் இலக்கணம் என்னபது தின்னம்.



(இக் கட்டுரையானது 4.10.2008 அன்று நுவரெலியா பிரதேசத்தில் மேற்படி படத்தினை காண்பித்து பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களையும் 'ஜெகாதா' என்பவர் எழுதிய 'இருபதாம் நூற்றாண்டின் இந்திய சினிமா' என்ற நூலிலுள்ள இப்படம் பற்றிய குறிப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகின்றது. விசேடமாக இக்கட்டுரையானது மாற்று சினிமா பிரியர்களை மனதிற்கொண்டே எழுதப்படுகின்றது.)

நன்றி
'நீலாமல்லி' (2008)
நு/வ/ரிலாமுல்ல த.வி
கந்தப்பளை