மகாகவி சுப்பிரமணியம் பாரதியாருக்கும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலருக்கும் சிலையெடுத்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஊவா மாகாணத்தின் ஊவா ஹைலண்ட்ஸ் பாடசாலை பெருமை சேர்த்துள்ளது.
பாடசாலைகளின் சமூக பாத்திரம் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் இத்தகைய ஒரு செயற்பாடு அனைவரினதும் கவனத்ததை ஈர்ப்பது தவிர்க்கவொன்னாதது.
பாடசாலைகளின் சமூக பாத்திரம் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் இத்தகைய ஒரு செயற்பாடு அனைவரினதும் கவனத்ததை ஈர்ப்பது தவிர்க்கவொன்னாதது.
மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், ஆன்மீகத்துறை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய கர்த்தாக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளின் ஒன்றுகூடலோடு 23.03.2016 புதன்கிழமை இந்நிகழ்வு அரங்கேறி நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்வு பற்றி ஒரு சில வரிகளில் பதிவது அவசியம்.
பாடசாலையின் முன்றலில் ஏலவே சரஸ்வதி தேவிக்கும் வள்ளுவருக்கும் விவேகாநந்தருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்த அடுத்த இருவர் பாரதியும் நாவலருமாவர். இத்தகைய சிலைகள் அமைக்கப்பட்டதனால் பாடசாலையின் முழுச்சூழலையும் தமிழும் சைவமும் காவிக்கொண்டிருக்கின்றன.
நிகழ்வுகளை தொகுத்தளித்த ஆசிரியர் திரு இரா.இரஜீவ்காந்தி, இச்செயற்திட்டமானது வருடாந்தம் பாடசாலையிலிருந்து வெளியேறும் உயர்தர மாணவர்களைக் கொண்டு சகல ஆசிரியர்களின் முயற்சியால் முன்னெடுக்கப்படுவதாகவும் 'ஏழைக்கு எழுத்தறிவித்தல்' எத்தகைய பெருமைக்குரியது என்பதனை பாரதியின் வரிகளை காட்டி செயற்திட்டம் பற்றி அறிமுகம் செய்ததோடு இத்தகைய செயற்பாடுகள் மாணவர்களின் ஆன்மீக, ஒழுக்க விழுமியங்களை மிளிரச்செய்யும் என்ற நம்பிக்கையினை விதைத்தார்.
நிகழ்வுகளுக்கு தலைமை ஏற்று உரையாற்றிய அதிபர் திரு எஸ்.கன்னியமூர்த்தி அவர்கள், எமது பாடசாலையில் இத்தகைய ஒரு நிகழ்வு நடைபெறுவதற்கு அடிப்படை காரணம் வட – கிழக்கு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று அவதானித்த விடயங்களை அடியொற்றியதென்றும் அந்த சாயலை இங்கு காணமுடியும் என்றும் மாணவர்களின் உள வளத்தை விருத்திச்செய்ய இவை உதவும் என்றும் குறிப்பிட்டார்.
வீரகேசரி பத்திரிகையின் பண்டாரவளை கிளை இணைப்பாளர் திரு ஏ.தியாகலிங்கம் தனது வாழ்த்துரையில் ஊடகதுறை சார்பாகவும் ஊவா கலை இலக்கிய பேரவையின் சார்பாகவும் வாழ்த்தியதோடு இச்செயற்திட்டமானது ஊவாவில் இப்பாடசாலையின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு தமிழையும் சைவத்தையும் ஒருங்கே வளர்க்கும் மிக உயரிய அறப்பணியில் இப்பாடசாலை இணைந்துள்ளமையானது ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் எனவும் ஆன்மீகத்தின் ஊடாக வாழ்வை வெற்றி கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஆசிரியர் திரு என்.கலைவாணர் பாரதியின் பாடல்கள் பல்வர் கால ஆழ்வார்களின் பாக்களோடு தொடர்புபடுமாற்றினை ஆய்வுக்கண்ணோட்டத்தில் விளக்கினார். பெரியாழ்வார் தன்னை தாயாகவும் இறைவனை பிள்ளையாகவும் கருதி பாடியமை, ஆண்டாள் கண்ணனை தன் காதலனாக கருதி பாடியமை முதலான பல பக்தி இலக்கிய சமாச்சாரங்கள் பாரதியின் பாடல்களில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அந்த சாயலை காண்பிக்க பல பாக்களையும் ஆதாரம் காட்டினார்.
சிறப்பு அதிதியாக பங்கேற்ற ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி திரு வ.செல்வராஜா, ஊவா மண் ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த மண். ஊவா, மலையகத்துக்கென பல பேராசிரியர்களை உருவாக்கி தந்துள்ளது. ஒரு காலத்தில் மலையத்தின் அரசியல் தலைமையை ஏற்றிருந்தது. மலையக தியாகிகள் நிறைந்த ஒரு இடம் என்றும் தற்போது அரசியல், கல்வி, கலாசாரம் என எல்லாவகையிலும் ஊவா ஓரங்கட்டப்படுகின்றது. இங்கு வாழும் மலையக தமிழர்களின் செறிவு திட்டமிடப்பட்ட வகையில் குறைக்கப்படுகின்றது. இத்தகைய ஒரு பின்னணியிலே நான் இந் நிகழ்வினை பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டதோடு சிலையெடுக்கப்பட்ட இரு பெரியார்கள் பற்றியும் விரிவான தனது கருத்துக்களை முன்வைத்தார்.
நாவலர் பற்றி...
ஈழத்தில் தமிழுக்கும் சைவத்துக்கும் ஒருங்கே பணியாற்றிய பெருந்தகை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களாவார். ஆனபோதும் நாவலர் வெறுமனே ஒரு நாயனாரகவே அதிகம் பார்க்கப்பட்டுள்ளார். அத்தகைய ஒரு முத்திரையை மாத்திரமே அவர்மீது குத்துவதற்கும் பலர் முயற்சித்துள்ளனர். ஆனால் நாவலர் சமயம் கடந்து தமிழுக்கு பணியாற்றியவராவார். அதனால் தான் நாம் இன்று நாவலருக்கு சிலையெடுக்கின்றோம். மலையகத்தில் நான் அறிந்தவரை எட்டிற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நாவலருக்கு சிலை வைக்கபட்டுள்ளது.
இவ்வுலகில் 57 வருடங்கள் வாழந்த நாவலர் திருமணம் முடிக்காது தன் வாழ்நாள் முழுவதும் சமூகத்திற்கு அர்ப்பணித்துள்ளார். நில பிரபுத்துவ குடும்ப பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் நாவலர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார். சமயத்தின் பேரில் வாழ்ந்த நடிப்பு சுதேசிகளை மிகவும் கண்டித்தார். அதற்காக சமய சீர்திருத்த இயக்கத்தை ஆரம்பித்தார். ஈழத்தில் முதன் முதலில் தமிழ் மொழியில் சைவ சமய பிரசங்கத்தை நிகழ்த்தியவர் நாவலர் அவர்களே. முதன் முதலில் ஆங்கிலமொழியிலான சைவ பாடசாலையை நிறுவினார். இவை அவரது சமய பற்றுதலாக பார்க்கப்பட்டாலும் இதிலுள்ள அவரது தமிழ் பற்றும் சமூகச் சிந்தனையும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கவை.
நாவலரின் தமிழ்ப்பணிக்கு சி.வை தாமோதரம்பிள்ளையின் 'சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே?' எனும் வரிகள் ஆதாரமாய் இருக்கின்றன. வசன நடையில் கைவந்த வள்ளாலர் என்பதற்கேற்ப முதன் முதலில் வசன நடையில் சிறந்த கட்டுரையை எழுதினார். நிறுத்தற்குறிகளை முதன் முதலில் தமிழ் மொழியில் கையாண்டு தேர்ந்தவர் நாவலர் அவர்களே. 'மகாசனம்' எனும் பதப்பிரயோகத்ததை முதன் முதலில் தமிழுக்கு தந்தவரும் இவரே. இலங்கையில் தமிழ் மொழியிலான பாடநூலுக்கு வழிகாட்டி நாவலர் அவர்களே. இதன் செல்வாகிக்னை இன்று தமிழ் நாட்டிலும் அவதானிக்கலாம். நாவலர் சமயம் கடந்து தமிழுக்கும் கல்விக்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியன. எனவே நாம் நாவலரை ஒரு மொழி சார்ந்த மனிதனாக பார்க்க வேண்டும். பயில வேண்டும்.
பாரதி பற்றி...
நாவலருக்கு காலத்தால் பிற்பட்டவரே பாரதி. தமிழ் இலக்கியங்களில் ஊறி திளைத்தவன், தன் சகோதரியை ஞான குருவாகக் கொண்டவன், பன்மொழிப் புலமையாளன், செல்லி, பைரவி போன்ற மேநாட்டு கவிஞர்களை அடியொற்றியவன், இந்திய சுதந்திர போராட்ட வீரர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன், இந்தியாவை ஒரே உருவமாக தரிசித்தவன், 'சிந்தனையே என் சித்தம்' என வாழந்தவன். இவன்தான் பாரதி.
'தீக்குள் விரலை வைத்தாய் நந்தலாலா...', 'உயர் தீயினை வளர் சோதியே...', என்றெல்லாம் பாரதி தீயை நேசித்து பாடியுள்ளான். 'ரௌத்திரம் பழகு' என உலகை வழிப்படுத்தியுள்ளான். இவ்வாறு யாரும் பேச விரும்பாதவற்றையெல்லாம் பாரதி தனது கவிதை உலகில் உச்சத்துக்கு கொண்டுச்சென்றான். இதனால் தான் அவன் 'கஞ்சா கவிஞன்' என விமர்சிக்கப்பட்டான்.
அடிப்படையில் பாரதி ஒரு அரசியல் வாதி. இலக்கியத்திற்கு தற்செயலாகவே வந்தான். ஆனால் அவன் சாதித்தவை ஏராளம். மொழியை மக்கள் மயப்படுத்தினான். மொழியை விஞ்ஞானபூர்வமாக அனுகினான். அதனால் தான் வானம் அளந்து அனைத்தும் அளந்திடும் மொழி தமிழ் என கூறினான். தமிழ் மொழி வளர வேண்டியது என அன்றே எதிர்வு கூறினான். பாரதியை கற்க வேண்டுமென்றால் அவனது கவிதை, கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு என அத்தனையையும் அனுபவிக்க வேண்டும்.
பாரதியும் நாவலரும் பல விடயங்களில் வேறுபட்டிருந்தாலும் மொழிப்பார்வை, சமூக நேசிப்பு என்பவற்றில் ஒன்றுபடுகின்றனர். எனவே இவ்விருவருக்கும் சிலையெடுப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என கூறினார்.
ஒரு சிறந்த பணியினை தனது வரலாற்றில் பதிவு செய்துள்ள ஊவா ஹைலண்ட்ஸ் அனைவரினதும் கவனத்திற்கும் பாரட்டுதல்களுக்கும் உரியதாகிறது. இதனை மலையத்தின் ஏனைய பாடசாலைகளும் முன்னுதாரணமாகக் கொள்வதில் தவறொன்றும் இருக்காது.