நாளைய மலையகம் - இரா.நிக்சன்லெனின்

நாளைய மலையகம்

எப்போதும் கண்ணீர்க் கதை
பேசுவதும்
கேட்பதும்
இனிப் பயனில்லை
எங்கள் ஏணிகள்

வானத்தை நோக்கத் தொடங்கி விட்டன...
கோட்டுப் பார்த்தோம்
மாற்றம் கண்டபாடில்லை.

தலைமைகள் தடுமாறுகிற,
உரிமைகள் தடுக்கப்படுகின்ற,
சிறுவர்கள் சீரழிக்கப்படுகின்ற
பொல்லாத மலையகம்
இனி ஒரு பொழுதேனும் வேண்டாம்.

கூறப் பயந்த இதழ்களும்
கேட்க மறுத்த செவிகளும்
விசாலம் மறந்த சிந்தனையும்
விலாசம் தொலைத்த மனிதமும்
படிக்கட்டுகள் செய்கின்றன
பயணப்படும் நோக்கோடு.

விடியும் வரை காத்திருக்க
விளிகளுக்குப் பொறுமையில்லை
விளக்குகள் கையில் கொண்டு
விரைகிறது மலையகம்

வாய்க்காத வாய்ப்புகளுக்கு
வாசல் திறந்திடுவோம்
பூட்டுக்கள் தடைசொன்னால்
பொறி கொண்டு மோதிடுவோம்.

அறிவுத் திரி கொண்டு
அறியாமை வென்றிடுவோம்
தடைகல்லாய் வருவோரை
உளி கொண்டல்ல
இடி கொண்டு தகர்த்திடுவோம்

இனியொரு விதி செய்வோம்
இலக்குகளை எட்டிட
எவர் துணையும் எமக்கு வேண்டாம்
கண் திறந்த என் எழுத்தை
கழு மரத்தில் ஏற்றிடாமல்
கருவறைக் குழந்தையாய்
கனிவாய் பாதுகாப்போம்.

புதிதாய் நாம் செய்த
பொன்னான மலையகத்தை
கற்றோர் கரம் சேர்ப்போம்
கரை தீண்டாமல் காத்திட...